தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 12

” காதல்,,

” பாலில் கலந்த ஒருத் துளி…

” விஷம் போல்!

” இந்த விஷத்தை…

” விஷத்தால் மட்டுமே…

” முறிக்க வேண்டும்!


ஆள் அரவமில்லாத அடர்ந்த மலைக் காடு…. அடிக்கடிக் கேட்கும் மிருகங்களின் கர்ஜனையும் ஊழையிடலும்…. எங்கோ யானையின் காலடியில் மிதிபடும் சருகுகளின் சப்தம்…. திடீரென்று பெரும் சப்தத்துடன் சுழன்றடிக்கும் காற்றின் ஒலி….. இதுபோன்றதொரு சூழ்நிலையில் தைரியமில்லா மனிதன் இருந்தால்…தலைதெறிக்க ஓடிப்போவது நிச்சயம்….

அடர்ந்த இருட்டையும் மீறி கீழே கிடந்த மான்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன்…. பார்க்கப் பார்க்க வெறி ஏறியது…. “இனி உன் விதியை நிர்ணயிக்கப் போவது நான்தான்டி நல்லு மகளே” இறுகிப் போன குரலில் வார்த்தைகளை உதிர்த்தான்….

அசைவின்றி கிடந்தவளைப் பாறையின் ஓரமாக உருட்டித் தள்ளினான்…. முதுகுப் பக்கமாக சொருகியிருந்த அருவாளையும் பாக்கெட்டில் இருந்த கத்தியையும் எடுத்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்தான்…. பிறகு நேற்று கொண்டு வந்து வைத்த சாக்குப் பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்தவற்றை எடுத்து வெளியே வைத்தான்….

சமையல் செய்வதற்கான பொருட்கள் அவற்றுக்கான ஒரு சில பாத்திரங்கள்…. இவனுக்கு மட்டும் இரு கம்பளிப் போர்வை…. அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய ஒரு பர்ஸ்டெய்டு பாக்ஸ்…. ஒரு ராந்தல் விளக்கு அதனுடன் கெரோசின் இருக்கும் கேன்…. இவற்றுடன் விலை மலிவான இரு மொபைல்களும் அதன் சார்ஜரும்… மொபைலை சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட்டுடன் கூடிய கார் பேட்டரி ஒன்று….

மொபைலை எடுக்கும் போது தான் மான்சியின் மொபைலை எடுத்து அவளின் பையின் பக்கவாட்டு ஜிப்பைத் திறந்து வேலு வைத்தது ஞாபகம் வந்தது… உள்ளே நுழையும் போது பாறைகளுக்கு வெளியே அவளது பையைப் போட்ட இடத்துக்கு வேகமாக வந்து எடுத்து அந்த ஜிப்பை திறந்து மான்சியின் மொபைலை எடுத்துப் பார்த்தான்…. 


சுத்தமாக அணைத்து வைக்கப்பட்டிருந்தது…. வேலு அதனை அணைத்து தான் போட்டிருக்கிறான் போல… மீண்டும் இருந்த இடத்திலேயே போட்டு ஜிப்பை இழுத்து மூடிவிட்டு பையை ஒரு பாறையின் இடுக்கில் வீசியெறிந்தான்….

பின்னர் உள்ளே வந்து மான்சிக்காக பிரத்யோகமாக தயார் செய்து எடுத்து வந்திருந்தவற்றை எடுத்தான்….. இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்ட இரு கைகாப்பு…. அதிலிருந்து ஒரு சங்கிலி இணைக்கப்பட்டு அது இரண்டாகப் பிரிந்து கால்களுக்கும் இரு இரும்பு காப்பு…. வாயில் ஒட்டுவதற்காக பெரிய சைஸ் ப்ளாஸ்டர்….

மான்சிக்குக் கொடுத்த தூக்கமாத்திரைகளின் பவர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் என்று தெரியாததால் உடனடியாக அவளை சிறைசெய்ய வேண்டும் என்று எண்ணினான்….

அதன்பின் வேகமாக செயல்பட்டான்…. முதலில் கால்களுக்கு காப்பை பிணைத்து அதனை அவிழ்க்க முடியாத அளவுக்கு அதன் போல்ட் நட்டுகளை டைட் செய்தான்…பிறகு அதே போல் கைக்கும் இரும்புக் காப்பை அணிவித்து போல்ட் நட்டுகளை டைட் செய்தான்…. கைகள் மற்றும் கால்களுக்கான சங்கிலிகளை ஒன்றாக இணைத்து அதில் ஒரு பூட்டைப் பூட்டினான்…. பூட்டப்பட்ட நீண்ட சங்கிலியை அங்கிருந்த சிறு பாறையுடன் இணைத்துக் கட்டினான்…. பிளாஸ்டரை அவள் கத்தும் போது ஒட்டிக் கொள்ளலாம் என நினைத்து எடுத்து வைத்தான்…. வேலைகள் முடிந்ததும் நிமிர்ந்து நின்று எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டான்…. திருப்தியாக இருக்கவும் தனக்கான இடத்தில் சென்று அமர்ந்தான்….

ஒரு பெரியப் பாறையின் மீது மிகப்பெரிய பாறையொன்று சாய்ந்து கிடந்ததில் அந்த இடம் குகை போல் தெரிந்தது… குகைக்குள் இயற்கையாகவே பாறையால் மேடை போன்ற அமைப்பு இருந்தது அதுதான் சத்யனுக்கான இருப்பிடம்….

சற்றுத் தள்ளி மான்சி கீழே கிடந்த இடம் சற்று சிரமமானது… மழை பெய்யவில்லை என்றால் பிரச்சனையில்லை… மழை வந்தால் சாய்ந்து கிடக்கும் பாறைகளின் இடுக்குகள் வழியாக மழை நீர் வழிந்து அந்த இடம் ஓடையாக மாறக்கூடும்….

அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து மான்சியை எந்த நிலையிலும் கண்காணிக்க முடியும்…. இப்போது இவள் உறங்கும் போதே தானும் உறங்கினால் தான் உண்டு என்று கம்பளிகளை எடுத்து ஒன்றை விரித்து மற்றொன்றால் போர்த்திக்கொண்டு படுத்தான்…..
ஆனால் உறக்கம் வரவில்லை…. சேது ஜான்சி இருவரும் வந்து தன்னிடம் காதலைச் சொன்னதும்… உயிரைக் கொடுத்தாவது உங்களை வாழ வைப்பேன் என்று தாம் கூறியதும் பின் அவர்களின் திருமணக்கோலமும்… சேதுவின் மரணமும் வந்து இதய அடுக்குகளில் இடைவெளிவிடாது அமர்ந்து கொள்ள உறங்க முயன்ற அவனது கண்கள் நீரில் மிதந்தது…..

“சேது” என்று புலம்பியபடி எழுந்து அமர்ந்தான்… கண்ணீர் கரகரவென வழிய விழிகள் நிறம் மாறியது…. நல்லுவின் மீதும் அவனைத் தூண்டிய மான்சியின் மீதும் ஆத்திரம் ஆவேசமாக வெளிப்பட பாறையிலிருந்து தாவி இறங்கி நின்றபடியே உணர்வின்றி கிடந்தவளின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி “என் நண்பனை கொன்னுட்டீங்களே பணக்கார நாய்களே….” என்றபடி கண்ணீருடன் கத்தினான்….

இவன் காலை அழுத்தி வைத்ததும் அவ்வளவு தூக்கத்திலும் சுவாசத்திற்கு திணறி வாயைத் திறந்து மூச்சை இழுத்து விட்டாள் மான்சி…. இன்னும் சற்று அழுத்தி மிதித்திருந்தால் அவளின் குரல்வளை உடைந்திருக்கும்….

“நீயும் உன் அப்பனும் என் நண்பனுக்கு வாழ சந்தர்ப்பம் கொடுக்கலை…. என்ன நடந்திருக்கும்னு புரியாமலேயே செத்துட்டான் என் சேது…. ஆனா உனக்கும் உன் அப்பனுக்கும் நான் ஒரு சந்தர்ப்பம் தர்றேன்…. நான் யார்னு தெரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம்…. அது வரை உன்னை கொல்ல மாட்டேன்டி” என்றபடி தனது காலை எடுத்த அடுத்த நிமிடம் “ஹக்” என்ற விக்கல் ஒலியுடன் மான்சியின் சுவாசம் சீரானது….

மீண்டும் வந்து பாறையில் அமர்ந்தான்…. மான்சியின் மீது பெண் என்ற இரக்கம் கூட வரவில்லை….. நண்பனை காவு கொண்ட பழிகாரியாகவேத் தெரிந்தாள்…..

பொட்டுக் கூட உறக்கமின்றி குகையைவிட்டு வெளியே வந்தான்…… கொடும் குளிரில் கும்மிருட்டில் சிறுத்தையைப் போல் அதிர அதிர நடந்தான்…. சேதுவின் ஞாபகமும்… அவனைக் காதலித்து ஆயிரமாயிரம் ஆசைகளோடு மணந்து இன்று அபலையாக நிற்கும் ஜான்சியும் தான் அவனை வாட்டி வதைத்தனர்….

தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து இவர்களை சட்டத்தின் முன்னிறுத்த எடுத்த முடிவு தவறோ? தீட்டிய அருவாளை இவர்களின் தலையை சீவி கூர் பார்த்திருக்க வேண்டுமோ? என்றெல்லாம் கூட யோசித்தான்….
விடிய விடிய நடந்தான்…. கால்கள் ஓய்ந்து போகவில்லை…. உரமேறியது….. நேற்று சேகரித்து வைத்த சுள்ளிகளை அள்ளி வந்து தீ மூட்டி அதன்முன் அமர்ந்தான்…. நெருப்பின் ஒளியில் அவன் கண்கள் ஜொலித்தன….

விரைவாகவே விடிந்தது…. பலதரப்பட்ட பறவைகளின் ஒலி… கூடவே யானைகள் பிளிரும் ஒலியும்….. அந்த சப்தமெல்லாம் பயப்படுத்துவதற்கு பதிலாக அவனைப் பதப்படுத்தியது…..

பெரிய பாறையின் மீது ஏறி நின்றான்… மலை உச்சியில் மிகப்பெரிய அந்தப் பாறையின் உச்சியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு காடுகள் தெரிந்தது… அதன் பிறகு எங்கோ ஒன்றாக மலை கிராமங்கள் தெரிந்தன…. வெகு தொலைவில் பெரியார் டேம் தெரிந்தது…. சூரியனின் சூடு குளிர்ந்து போன உடலுக்கு இதமாக இருந்தது…. சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்து விட்டு கீழே இறங்கினான்….

குகைக்குள் எட்டிப் பார்த்தான்… இரவு எப்படிப் போட்டு வைத்தானோ அப்படியேக் கிடந்தாள் மான்சி….. முகத்தில் ஒரு திருப்தி நிலவ வெளியே வந்து அணைந்து கிடந்த நெருப்பைக் கிளறி ஒரு கரித்துண்டை எடுத்து பாறையில் வைத்து நசுக்கி உள்ளங்கையில் அள்ளிக்கொண்டு காட்டுக்குள் நடந்தான்….

சற்றுத் தொலைவில் பாறைகளின் இடுக்கிலிருந்து வழிந்த நீர் சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது…. பல் தேய்த்து முகம் கழுவிவிட்டு மீண்டும் குகைக்கு வந்து ஒரு பாத்திரத்தை எடுத்துச் சென்று நீரெடுத்து வந்தான்….

தனது வாட்சை எடுத்து மணி பார்த்தான்… எட்டரை ஆகியிருந்தது…. இப்போது தான் லேசாகப் புரண்டுப் படுத்தாள் மான்சி… அதிகமாகப் புரள பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி இடம் கொடுக்காததால் ” ம் ம்” என்ற சிறு முனங்கலுடன் மீண்டும் இருந்த நிலைக்கேத் திரும்பினாள்….

அவளின் நடவடிக்கைகளையே பார்த்திருந்த சத்யனின் உதடுகளில் ஒரு ஏளன சிரிப்பு….

மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டி அதன் மேல் தண்ணீர் இருந்தப் பாத்திரத்தை வைத்தான்…. இன்னொருப் பாத்திரத்தில் அரிசியை கழுவிப் போட்டு கஞ்சியாகத் தயாரித்தான்….

கஞ்சியில் உப்பிட்டு கலக்கி சூடாக இறக்கி ஒரு மண் குவளையில் ஊற்றி சுடச்சுட குடித்தான்…. மிச்சத்தை மூடி பாதுகாப்பாக எடுத்து வைத்தான்…. 


பிறகு செல்களை எடுத்துக் கொண்டு பாறையின் மீது ஏறி நின்று சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்தான்… சிக்னல் கிடைத்தது… ஒரு மொபைலில் கேரளா என்றும்… மற்றொன்றில் தமிழ்நாடு என்றும் வந்தது… லேசாக சிரித்துக் கொண்டான்….

மீண்டும் கீழே வந்து வேக நடையாக காட்டுக்குள் ஓடினான்…. சற்றுதூரம் போனதும் குரங்குகளின் நடமாட்டத்தைப் பார்த்தான்…. குரங்குகள் இருக்குமிடத்தில் மனிதனுக்குத் தேவையான உணவு நிச்சயம் கிடைக்கும்….

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தான்…. நினைத்தது சரியே….. தானாக வளர்ந்து கிடந்த பழ மரங்கள்…. காட்டுக் கிழங்குகளின் செடிகள்…. ஒரு குரங்கு அதனை வேரோடு பிடுங்கி உண்பதைக் கண்டு சற்று நகர்ந்து இவனும் நான்கைந்து கிழங்குச் செடிகளைப் பிடுங்கிக் கொண்டான்….

பிடுங்கியதை ஓரமாக வைத்துவிட்டு வேர் செத்துப் போனதால் காய்ந்து விழுந்து கிடந்த மரங்களின் கிளைகளை வெட்டி சேகரித்தான்…. பச்சை மரத்தில் ஏறி சில கிளைகளை வெட்டிக்கொண்டு ஒரு வேரால் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டித் தூக்கிக் கொண்டு குகைக்கு வந்தான்….

காய்ந்த விறகுகளை தனியாக போட்டுவிட்டு பச்சை கிளைகளையும் தனது அருவாளையும் மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு பாறையின் மீது அமர்ந்து ஆள் உயரத்துக்கு அவற்றைத் தரித்து அதன் முனையை கூராக சீவி செதுக்கினான்….

நான்கைந்து மரக்கிளைகளை வேல்கம்பு போல் சீவி பாறையின் சந்தில் எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டான்… கிழங்குகளை செடியிலிருந்து வெட்டி தண்ணீர் விட்டு கழுவி எடுத்து வைத்துக் கொண்டான்….. மீண்டும் ஓடைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்தான்…..

நேரம் மதியம் இரண்டைக் கடந்தது…. குகைக்குள் சென்று மிச்சமிருந்த கஞ்சியை குவளையில் ஊற்றிக் குடித்தான்…அப்போது மான்சியிடமிருந்து சிறு முனங்கல் “ஏய்,, யா…. ர் இருக்…. கா… தண்ணீ தண்… ணீ ” என்று திக்கித் திணறியவளை அதே ஏளனத்தோடுப் பார்த்தான்….

“பாவம் தண்ணி கேட்கிறாளே?” என்று சிரித்தவன் “இதுக்குள்ள தண்ணி குடுக்கக் கூடாதே?” என்று அவனுக்கே சொல்லிக்கொண்டு கஞ்சியை குடித்து முடித்தான்…. 

சற்றுநேரத்தில் தண்ணீருக்காக மான்சியின் தவிப்பு அதிகமானது…. “தண்ணீ தண்ணீ ” என்று பிதற்ற ஆரம்பித்தாள்….. சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்தவன் அவள் வாய் கோணி கால்களும் கைகளும் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்கவும் தண்ணீரை எடுத்துக் கொண்டு அவளை நெருங்கினான்…..

குனிந்து அவளின் வாயைக் குவித்துப் பிடித்து தண்ணீரை ஊற்றவும்…. அவசர அவசரமாக விழுங்கினாள்….. வறண்டு போயிருந்த நாவும் நெஞ்சும் நீர் பட்டு சுறுசுறுப்படைய கண்களைத் திறந்துப் பார்த்தாள்….

ஒன்றும் புரியவில்லை…. மங்கிய விழிகளை மீண்டும் மூடித் திறந்தாள்…. வெளிச்சம் தெரிந்தது…. வெளிச்சத்தின் ஊடு விலங்கின் பசியோடு அமர்ந்திருந்த சத்யனும் தெரிந்தான்……

ஏதோ வித்தியாசம் புரிய ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்திப் பார்த்தாள்…. கடைசியாக காரில் கண்கள் சொருகியது ஞாபகம் வந்தது….. குனிந்து தனது நிலையைப் பார்க்க முயன்றாள்….. தலையை தூக்கவே முடியவில்லை… கைகளை இழுத்துப் பார்த்தாள்… சரசரவென இரும்பு சங்கிலி இடரும் சப்தம் கேட்டது…. கால்களிலும் இரும்பு இழுபடும் ஓசை…. ஏதோ நடந்திருக்கிறது என்று தெளிவானது…..

மயக்கம் முற்றிலும் தெளிய “ஏய்……” என்றபடி எழ முயன்றாள்….. கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியவில்லை….. கால்களைக் குறுக்கி கவிழ்ந்து மண்டியிட்டவாறு எழுந்து அமர்ந்தாள்….

எதிரேயிருந்த சத்யனைக் கண்டதும் ஆத்திரம் அனலாய்ப் பறக்க “யூ ஸ்கவுண்ட்ரல்…. யாரை கொண்டு வந்து இங்க வச்சிருக்கேன்னு தெரியுமா?” என்று கத்தவும்…. சத்யனிடம் அதே ஏளன சிரிப்பு “ஓ தெரியுமே…. நாசக்காரன் நல்லு பெத்த நாசக்காரியை கொண்டு வந்திருக்கேன்….” என்றவன் விளையாட்டாக தனது தலையைத் தட்டிக் கொண்டு…. “இல்ல இல்ல கடத்திக்கிட்டு வந்திருக்கேன்” என்றான் தெளிவான குரலில்….

விழிகளால் எரிப்பவள் போல் அவனை விழித்துப் பார்த்து “முட்டாள்…. உன் ப்ரெண்ட் போன இடத்துக்கே நீயும் போகனும்னு ஆசையா? என்னை கடத்தினா சும்மா விட்டுடுவாங்கன்னு நினைச்சியாடா? நொருக்கிடுவாங்க நொருக்கி” என்றாள்

எழுந்து நின்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு சப்தமாக வாய்விட்டுச் சிரித்தான் சத்யன்…. சிரிக்கும் அவனை சினத்துடன் பார்த்து “மரியாதையா என்னை கொண்டுபோய் விட்டுடு….. இல்லைன்னா உன்னை மட்டும் இல்ல…. உன் குடும்பத்தையே ஒன்னுமில்லாம பண்ணிடுவார் என் அப்பா” என்று எச்சரிக்கை செய்தாள்….
மீண்டும் மீண்டும் சிரித்தவன் ஒரே தாவலில் அவளருகே வந்து கூந்தலைக் கொத்தாகப் பற்றி முகத்தை நிமிர்த்தி “செத்துப் போறோம்டி…. குடும்பமே செத்துப் போறோம்…. சேது இல்லாத உலகத்தில் நாங்க மட்டும் ஏன் இருக்கனும்? வாழ ஆசையில்லை…. மொத்தமா சாக துணிஞ்சு தான் இதைச் செய்றோம்…. ஆனா அதுக்கு முன்னாடி?……..” என்றவன் ரௌத்திரமாக விழித்து…. “நீயும் உன் அப்பனும்……. போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு சகல மரியாதையோட அனுப்பிட்டு தான் நாங்க போவோம்டி பிசாசே…. பழிக்குப் பழி…. சேதுவுக்காக…. அவன் சாவுக்கு நியாயம் கிடைக்கனும்” என்று அவள் கூந்தலை உதறிவிட்டு மீண்டும் பாறையின் மீது வந்து அமர்ந்தான்….

“நடக்காததை நினைச்சு உளறாதடா…. உன் பிரண்ட் செத்தது விதி….. நீயாவது பிழைச்சியேன்னு சந்தோஷப்படு….. இப்போ மொதல்ல என்னை அவுத்துவிடு” என்று பெருந்தன்மையாக பேசுவதுபோல் பேசிக்கொண்டே போனாள்…

“நிறுத்துடி” என்று ஆத்திரமாகக் கத்தியபடி மீண்டும் அவளருகே வந்தவன்… அவள் என்னவென்று உணரும் முன்பே வலக்கையை சுழற்றி அதிவேகமாக அவள் கன்னத்தில் இறக்கினான்……

ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே மான்சிக்குப் புரியவில்லை…. கண்களுக்குள் பூச்சி பறக்க… இடப்பக்க காது சில விநாடிகள் இயங்காமல் நின்று போனது….. கன்னத்தை நெருப்பால் சுட்டது போன்ற எரிச்சல்….. உதட்டைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்து விழிகளை விரித்தாள்….

எதிரே நின்றவனின் மீது மகாராணியின் தோரணையோடு ஒரு ஏளனப்பார்வையை வீசி “பொண்ணைக் கட்டிப் போட்டு அடிக்கும் நீ பெரிய வீரன் தான்டா” என்று சிரித்தாள்…

இவள் இப்படித்தான் என்று தெரிந்திருந்தாலும்… வலியால் சொட்டு நீர் விடாத கண்களைப் பார்த்து அதிசயித்தவாறு “ஆமாம்….. பொண்ணை கட்டி வச்சு அடிக்கிறது கேவலமான செயல் தான்….” என்றவன் அவளுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்து “ஆனாப் பாரு நீ பெண்ணேயில்லையே….. சீதையோட வாழ்க்கைக் குலைத்த சூர்பணகைப் போல நீ ஆயிரம் மடங்கு அதிக திமிர் பிடிச்ச ராட்ஸசி…. அதனால உன்னை கட்டி வச்சு தான் அடிக்கனும்” என்றான்…..

அசரவில்லை மான்சி…. வார்த்தையால் அவனை அடித்தாள்…. அவனும் பதிலடிக் கொடுத்தான்…. இவள் ஆங்கிலத்தில் அசிங்கமாக திட்ட…. ஓடிவந்து மற்றொரு கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினான்….. விவாதம் விவகாரமாகப் போய்க் கொண்டே இருந்தது…..
சத்யனுக்குத் தெரியும்…. இவள் இப்படியெல்லாம் பேசுவாள் என்று…. ப்ளாஸ்டரை எடுத்து கத்தரித்து அவளின் வாயில் ஒட்டி கீழேத் தள்ளிவிட…. “ம் ம்” என்று திணறியபடி வீழ்ந்தாள்….

இரவு கவிழ ஆரம்பித்தது….. இருட்டின் அமைதியில் காட்டின் சலசலப்பு அதிகமாக கேட்டது…. குகை வாசலில் நெருப்பை மூட்டி கிழங்கை அதில் போட்டு சுட்டான்…. வெந்த கிழங்கை ஒரு இலையில் வைத்துக் கொண்டு உள்ளே வந்து தனது பாறையில் அமர்ந்தான்…

தோலை பிய்த்துவிட்டு சுடச்சுட கிழங்கை உண்டவன் திமிறல் அடங்கிக் கிடந்தவளைப் பார்த்து “உனக்கு இன்னைக்கு எதுவும் இல்லை…. பட்டினி கிடந்தால் தான் பாட்டாளி சிந்தும் ரத்தத்திற்கான அர்த்தம் புரியும்” என்றான்….

அவனிடம் உணவு வாங்கித் தின்பதை விட உயிரை விடலாம் என்று எண்ணியவள் போல் ஒரு அலட்சியப் பார்வையுடன் திரும்பிக் கொண்டாள்……

கிளம்பி வரும் போது ‘நான் நிறைய படிக்கவேண்டியிருக்கு… அதுக்கப்புறம் எக்ஸாம் வேற இருக்கு… அதனால கால் பண்ணாதீங்க… எனக்குத் தோனும்போது நானே கூப்பிடுறேன் டாடி’ என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு வந்த தனது முட்டாள்த் தனத்தை எண்ணி இப்போது வருந்தினாள்….

இவன் என் போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தால் கூட கால் பண்ணிப் பண்ணி பார்த்து சந்தேகத்தில் வர வாய்ப்பிருக்கு… இப்போ நானே சொல்லிட்டு வந்ததால் அதுவும் போச்சு….. இனி இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? இது எந்த இடமாக இருக்கும்? நான் வந்து எத்தனை நாள் இருக்கும்? சிந்தனை கொடுத்த கேள்விகளுடன் அப்படியே கிடந்தாள்…

அதிகமாக முரண்டு செய்ததால் கையிலும் கால்களிலும் போடப்பட்டிருக்கும் இரும்பு விலங்குகள் காயப்படுத்தியிருந்தன…. இனி அதுபோல் செய்யக் கூடாது என்று முடிவு செய்தாள்… காயமேற்பட்டால் தப்பிக்க முடியாதே…. மான்சிக்கு பயமில்லை…. தப்பிக்கும் வழியைத் தான் இனி பார்க்க வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்தாள்……

பலவாறாக யோசித்தவளுக்கு சட்டென்று அப்பா கொடுத்த பிஸ்டலின் ஞாபகம் வந்தது…. அதை பையில் வைத்ததும் ஞாபகம் வந்தது…. ‘பிஸ்டல் இவன் கையில் மாட்டியிருக்குமா?….. பேக் எங்கே போயிருக்கும்… கார் என்னாச்சு?…..’


இரவு நெடுநேரம் ஆனது… இயற்கை உபாதை… குடித்த நீர் அடிவயிற்றை முட்டியது… மெல்ல தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள்…. கம்பளியால் மூடிக்கொண்டு படுத்திருந்தான்… சீரான மூச்சில் உறங்குகிறான் என்று புரிந்தது…..

“ம் ம் ம்…..” என்று முனங்கினாள்… அசையவில்லை அவன்…. கால்களில் இருக்கும் சங்கிலியை பாறையில் தேய்த்து ஒலியெழுப்பினாள்…. அடுத்த விநாடி போர்வையை வீசிவிட்டு வேகமாக எழுந்தான்….. திகைத்தாள் மான்சி…. நல்ல உறக்கத்திலும் இவ்வளவு கவனமாக இருப்பவனை எப்படி ஏமாற்றிவிட்டு தப்பிப்பது?

அவளருகே வந்து “என்ன?” என்று கேட்க…… விலங்கிட்ட கையை உயர்த்தி சுண்டுவிரலைக் காட்டினாள்…..

எதுவும் பேசவில்லை அவன்…. சங்கிலியின் பூட்டுக்கான சாவியை எடுத்து வந்து திறந்து ஒற்றைக் கையால் அவளைத் தூக்கி நிறுத்தினான்….. கை காப்பை அவிழ்த்துவிட்டு வாயிலிருந்த பிளாஸ்டரையும் பிய்த்தெடுத்தான்…. டார்ச்சை எடுத்துக்கொண்டு அவளது வலக்கையை மடித்து பின்புறமாக வைத்தபடி குகைக்கு வெளியே தள்ளி வந்தான்…..

அப்போதுதான் தனது உடையை கவனித்தாள்…. மின்சாரத்தை மிதித்ததுப் போல் சட்டென்று துள்ளி “ஏய் என் டிரஸை அவுத்தது யார்?” என்று கோபமாகக் கேட்க……

“ம்… அஞ்சாறு பேர் கூட்டு சேர்ந்து அவுத்தோம்” என்று அலட்சியமாக கூறியதும் “டேய் ராஸ்கல் ” என்றபடி அவன் மீது பாய்ந்தவளை அனாவசியமாக உதறித் தள்ளிவிட்டு “இப்போ அமைதியா வரப் போறியா? இல்ல உள்ள இழுத்துட்டுப் போய் கட்டிப் போடவா?” என்று கேட்டான்….

வயிற்று உபாதை பேசுவதற்கு வழி விடவில்லை…. ஏதோ முனங்கியபடி நடக்க ஆரம்பித்தாள்…. முன்னால் அவளை நடக்க வைத்து இவன் பின்னால் செல்ல…. சங்கிலியிட்ட கால்களால் நடக்க முடியாமல் இருட்டில் அடிக்கடி சரிந்து விழுந்தாள்….. “கால் சங்கிலியை அவுத்து விடுடா இடியட் ” என்ற மறுவிநாடி முதுகில் பலமாக ஒரு அறை வாங்கினாள்….

அறை வாங்கிய வேகத்தில் அப்படியே முன்புறமாக விழுந்தாள்…. கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தியவன் “நீ திமிரா பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் உடனடியா இதுபோல் பதில் வரும்” என்றான் நக்கல் வழியும் குரலில்…..




You may also like...