தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 10

இடியா விழுந்தது? இதயம் பிளந்ததா? உயிர் ஒழுகிப் போனதா? ஜீவனை இழந்த என் கண்கள் இனி என்னவனைக் காணாதோ? நீ கட்டியத் தாலியை நான் கழட்டிய நேரம் எமன் வந்துவிட்டானோ? என்னால் தானே சேது? நீ இல்லாமல் போனது என்னால் தானே சேது?’ கத்தக் கூடத் தோன்றாமல் அப்படியே ஸ்தம்பித்தாள் ஜான்சி….

பேச்சின்றிப் போன மகளுக்கு மூச்சு இருக்கிறதா என்று பயந்தவள் போல் தலையைத் தூக்கி மகளைப் பார்த்து “ஜான்சி… ஜான்சி” என்று அழைத்தும் பதிலில்லாமல் அவள் நிலையின்றி வெறிக்க…. பட் பட்டென்று கன்னத்தில் அறைந்து “ஏய் ஜான்சி” என்று அதட்டியதும் உயிர் வந்தது போல் சிலிர்த்துக் கொண்டாள்….

தாயின் வார்த்தையால் நெஞ்சம் பிளவாகிப் போனதில் நெடுந்துயர் கொண்ட ஜான்சி நீண்ட குரலெடுத்து “அய்யோ சேது… என்னை விட்டுட்டுப் போய்ட்டியா?” என்று கத்தியக் கத்தலில் அந்த கட்டிடமே அதிர்ந்து குலுங்கியது….

மகளின் கூக்குரல் கேட்டு மாடியேறி வந்தார் நல்லு….

அப்பனைக் கண்டதும் அழுது கொண்டிருந்தவள் கட்டிலில் இருந்து தாவி இறங்கினாள்… பத்திரகாளியாய் எதிரில் வந்து நின்று அவர் சட்டையைப் பிடித்து “அடப்பாவி என் புருஷனைக் கொன்னுட்டியா? எங்களை விட்டிருந்தா எங்காவதுப் போய் பிச்சையெடுத்தாவது பொழிச்சிருப்போமே…. இப்புடி அநியாயமா கொன்னுட்டியேடா பாவி” என்று கத்தியவளை “என்னடி ஓடுகாலி நாயே மரியாதை குறையுது?” என்று ஒரு அறைவிட்டு அலட்சியமாக உதறித் தள்ளினார்…

“அவன் விதி போய்ச் சேர்ந்துட்டான்…. ஒப்பாரி வைக்காம ஒழுங்கா இருக்கிற வழியைப் பாரு…. இல்லேன்னு வை… அவன் கூட இன்னும் ரெண்டு பேர் இருந்தானுங்களே? அவனுங்களையும் சத்தமில்லாம போட்டுத் தள்ளிடுவேன்” என்ற மிரட்டலுடன் அறையைவிட்டு வெளியேறினார்….

தரையில் சுருண்டு கிடந்தவளின் அருகே வந்து அமர்ந்து “அழாதம்மா” என்று மகளைத் தூக்கி மடியில் கிடத்தினாள் கஸ்தூரி…

“நான் பாவிம்மா…. அவரை விரட்டி விரட்ட காதலிச்சு கல்யாணத்துக்கும் வற்புறுத்தி கடைசில என்னாலேயே சாவும் வந்துடுச்சே?…. நான் அவர் லைப்ல வரலைன்னா அவர் ப்ரண்ட்ஸ் கூட சந்தோஷமா இருந்திருப்பாரே?” என்று சொல்லிச் சொல்லி அழுதவள் ஒரு கட்டத்தில் அழவும் முடியாமல் மயங்கி சரிந்தாள்…..

” வானம் கருத்திருக்கு….

” வட்டநிலா வாடிருக்கு….

” ஏங்கி ஏங்கி அழுகிறேனே….

” என்னவனே எங்கேப் போனாய்?

” கரும் மேகம் கூடியிருக்கு…

” நிலவு அதில் மறைஞ்சிருக்கு…

” மேகம் கலைந்ததும் நிலவாக….

” நீ தெரிவாயா கண்ணா?


” உயிரின் உயிரை…..

” இழக்கும் வலி…

” காதலில் மட்டுமில்லை…

” நட்பிலும் உயிர்வதை தான்!!

கதறலும் நின்று கண்ணீரும் நின்று காய்ந்து போன சருகாக….. அன்பு கொண்டவனை இழந்து ஆதரவின்றி கிடந்த மகளைப் பார்த்து பெற்ற வயிறு வெறுமையில் துடித்தது…. மகளை விட்டு அகலாமல் அமர்ந்திருந்தாள்…

கணவனும் இளைய மகளும் இணைந்து மூத்தவளுக்கு இழைத்த அநீதி கண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கோழையாக இருப்பது இன்னும் கொடும் வலியாக இருந்தது….

ஒன்றும் புரியமால் அமர்ந்திருந்தவளுக்கு மான்சி வரும் சேதி கிடைத்ததும் இன்னும் அதிர்வு அதிகமானது… இன்னும் ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாளோ? என்ற எண்ணத்துடன் காத்திருந்தாள்…

மான்சி வந்தாள்… கார் கதவைத் திறந்து அதே மதர்ப்புடன் திமிராக இறங்கியவள்… விரலைச் சொடுக்கி வாட்ச்மேனை அழைத்தாள்….

பணிவுடன் வந்து வாய் பொத்தி நின்றவரின் தாடையில் தனது கை விரல்களை பதித்து விட்டு “ஹாரன் சத்தம் கேட்டதுமே கேட்டைத் திறக்காம எங்கடா போன” என்று கோபமாக கேட்கவும்.

“இல்லைம்மா…. நாய்களுக்கு சாப்பாடுக் கொடுக்கப் போய்ட்டேன்” என்று அத்தனை பேரின் முன்பு அறை வாங்கிய அவமானத்தில் குறுகிப் போய் நின்றிருந்தார்…

“நாய்க்கு சாப்பாடு குடுக்கப் போனியா? இல்ல நீ கொட்டிக்கப் போனியா?… இனி என் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன்யே கேட்டைத் திறந்து ரெடியா வச்சிருக்கனும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டுக்குள் வந்த மகளைப் பெருமையுடன் பார்த்தார் நல்லு…..

தகப்பனை ஆத்திரமாகப் பார்த்தவள் “நாய்களை கவனிக்க தனியா இன்னொரு ஒரு நாயை அப்பாய்ன்ட் பண்ணுங்க டாடி… கேட் திறக்க த்ரீ மினிட்ஸ் லேட்” என்று முழங்கிவிட்டு தனது அறைக்கு செல்ல மாடியேறவும்…. அவள் பின்னாலேயே நல்லுவும் ஓடினார்…

“மன்னிச்சுக்கோ பாப்பா…. முதல் வேலையா ஒரு ஆளைப் போடுறேன்” என்று மூச்சு வாங்க பேசியவரை அலட்சியமாகப் பார்த்து “நான் ரெஸ்ட் எடுக்கனும்… அப்புறமா பேசலாம்” என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்…

“பாப்பா ஏதாவது சாப்ட்டு…..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் கதவு முகத்தில் அறைவது போல் மூடப்பட்டது….. மூடியக் கதவையேப் பார்த்துவிட்டு “ரொம்ப தூரம் கார் ஓடிக்கிட்டு வந்த களைப்பா இருக்கும்… ரெஸ்ட் எடுக்கட்டும்… பிறகு பார்க்கலாம்” என்று தனக்குத் தானேச் சொல்லிக் கொண்டு கீழே இறங்கினார்….

மதியம் ஒரு மணிக்குச் சென்று படுத்தவள் மாலை ஆறு மணி வாக்கில் ஜான்சியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்….

இருக்கும் இடம் புரிந்து எழுந்தவள்.. இன்டர்காமில் காபி எடுத்து வரும்படிக் கூறிவிட்டு… முகம் கழுவிக்கொண்டு வந்தாள்….

காபி எடுத்து வந்தது நல்லு தான்… வாங்கிக் கொண்டவள் “என்ன டாடி நீங்க எடுத்துட்டு வர்றீங்க?” என்றபடி சோபாவில் உட்கார… எதிரில் அமர்ந்தவர் “உன்கிட்ட பேசனும் பாப்பா… அதான் நானே வந்தேன்” என்றார்….

மிடறு மிடறாக ரசனையோடு காபியை குடித்தவள் “சொல்லுங்க டாடி” என்றாள்…


“பத்து நாள் ஆகும்னு சொல்லிட்டு சீக்கிரமே வந்துட்டியே பாப்பா? ஊட்டில வசதி பத்தலையா?”

காபி கப்பை டீபாயில் வைத்து விட்டு “ப்ரெண்டோட எஸ்டேட்ல தங்கி படிக்கிறதுனு போனோம்…. அங்கப் பார்த்தா அவளோட ரிலேஷன்ஸ் எல்லாரும் வந்துட்டு ஒரே கூட்டம்…. எனக்குப் பிடிக்கலை… அதான் கிளம்பி வந்துட்டேன்…. நாளைக்கு நைட் சென்னை கிளம்பிடுவேன்… அங்கே என்னோட ரூம்லயே தங்கிப் படிச்சுக்கிறேன்” என்றாள்

“அதுவும் சரிதான்… அடுத்த ஸ்டடி லீவுக்குள்ள ஊட்டில ஒரு எஸ்டேட் வாங்கி வச்சிடுறேன் பாப்பா… நம்ம இடத்துலயே நீ தங்கலாம்” என்றார் நல்லு…

சிறு கர்வச் சிரிப்புடன் நிமிர்ந்தவள்… “குட்…. அதை மொதல்ல செய்ங்க” என்றுவிட்டு “ஆமா ஏதோ பேசனும்னு சொன்னீங்களே டாடி?” என கேட்க…

“அது பாப்பா… நம்ம ஜான்சி மேட்டர் தான்…. அந்த பயலை போட்டாச்சு” என்று ஏதோ காலைக் கடித்த எறும்பை நசுக்கியது போல் சாவதானமாக சொல்லவும்….

“வாட்?” என்று புரியாமல் புருவம் சுருக்கி கேட்டாள்…

“அதான் பாப்பா அந்த மூணு பயலுக… நம்ம ஜான்சியை மயக்கி தாலி கட்டி நம்ம சொத்தை அடிக்க நினைச்சானுங்க… நான் அவனுங்கள்ள ஒருத்தனையே அழிச்சிட்டேன்… மூணு பேருக்கும் தான் குறி வச்சேன்… ரெண்டு பேர் தப்பிச்சி ஜான்சிக்கு தாலி கட்டினவன் மட்டும் போய் சேர்ந்துட்டான்… இன்னைக்கோட மூணுநாள் ஆகுது பாப்பா… பக்காவா ப்ளான் பண்ணி போட்டாச்சு….” என்றார் சந்தோஷம் கூடிவந்த குரலில்….

மான்சிக்கு அதிர்வு இல்லையென்றாலும் திகைப்பு இருந்தது “ஏன் டாடி இப்படி செய்தீங்க? ஆளை வச்சு நாலு போட்டு மிரட்டி அனுப்ப வேண்டியது தானே?” என்றாள் சலிப்புடன்…

“அதான் பாப்பா தப்பு…. ஆள் வச்சு அடிச்சோம்னா சிம்பதி கிரியேட் ஆகும்…. அதுவே நம்ம வீட்டுல இருக்கிற மூதேவி உருகிப்போய் எப்படியாவது ஓடிப்போகப் பார்க்கும்…. அதான் மொத்தமா முடிச்சிட்டேன்… அன்னைக்கு நாம கழட்ட சொன்ன தாலி கழட்டினதாவே இருக்கட்டும்… முடிஞ்சது மேட்டர்” என்று கையை உயர்த்தி தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு நிம்மதியாக சாய்ந்தார்….

மான்சி சற்றுநேரம் அமைதியாக இருக்க…. “என்ன பாப்பா அமைதியாகிட்ட?” என்று கேட்டதும்… “ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தவள்” அடிச்சு கையை காலை உடைச்சிருக்கலாம்னு நினைச்சேன்…. செத்துப் போகனும்னு நினைக்கலை” என்றவள் டீபாயை சுற்றி வந்து அப்பாவின் அருகில் அமர்ந்து “சரி விடுங்க… நடந்து முடிஞ்சிடுச்சு…. இனி பேசவேண்டாம்… அவன் விதி நம்ம கையால போய் சேரனும்னு இருக்கு….” என்று கூறிவிட்டு நல்லுவின் பக்கம் திரும்பி “போலீஸ் பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று கேட்டாள்…

“மின் கசிவுன்னு சொல்லி கேஸையே முடிச்சிட்டானுங்க பாப்பா…. நம்ம தூரத்து உறவு என் மாமா ரங்கராஜனோட மகன் மோகன்குமார் தான் விருதுநகர் மாவட்ட சப் ஏசி பாப்பா… அவன்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான்… நமக்கு ஒரு வேலையும் இல்லை..” என்று அலட்சியமாக சொல்லவும்… “ம் ம் குட்” என்றாள்….

எழுந்து அறைக் கதவை நெருங்கியவள் “அக்காவை சரி பண்ணி உங்க தம்பிப் பையனை வரவழைச்சு சீக்கிரம் மேரேஜை முடிக்கப் பாருங்க….” என்று கூறிவிட்டு கதவைத் திறந்து வெளியே செல்ல அவள் பின்னாலேயே நல்லுவும் வந்தார்..

“அதெல்லாம் பேசிட்டேன் பாப்பா… இன்னும் இருபத்தைஞ்சு நாள்ல இந்தியா வர்றானாம்… வந்த மறாவது வாரமே மேரேஜ் தான்…. அவன் வர்றதுக்குள்ள மேரேஜ் வேலை எல்லாத்தையும் முடிச்சு ரெடியா இருக்கனும்….. நீ கொஞ்சம் பேசி ஜான்சியை சரி பண்ணு” என்று ரகசியமாக கூறவும்….

சட்டென்று நின்ற மான்சி “அவன் இறந்தது ஜான்சிக்கு தெரிஞ்சு போச்சா?” என்று கேட்க…

“ஆமா,, நேத்துதான் உன் அம்மா சொல்லிருக்காப் போலருக்கு… அதுலருந்து ஒரே அழுகை தான்… ஏன்தான் இப்படியொருத்தி வந்து எனக்குப் பொறாந்தாளோ?” என்றார்…

படிகளில் இறங்க இருந்தவள்… அதை கைவிட்டு தனது அக்காவின் அறைப் பக்கமாகத் திரும்பினாள்…. “அவனுங்க ரெண்டு பேரும் தப்பிச்சதும் ஒருவகையில் நல்லது தான் டாடி… அவனுங்க தான் ஜான்சியோட மனசை மாத்தி அவ மேரேஜ்க்கு ஹெல்ப் பண்ணப் போறாங்க….” என்றாள் திமிர்ப் பார்வைப் பார்த்து…

புரியாமல் மகளைப் பார்த்தவர் “எப்புடி பாப்பா?” என்றார்….

“அதை என்கிட்ட விடுங்க…. இப்போ கொஞ்சமா சொல்லிட்டுப் போறேன்…எக்ஸாம் முடிச்சுத் திரும்பி வரும்போது ஸ்ட்ராங்கா பண்ணிடலாம்” என்று சிரிப்புடன் சொல்ல… மிதப்புடன் தலையசைத்தவாறு இருவரும் ஜான்சியின் அறைக்குள் நுழைந்தனர்….

எரிந்து போன காட்டில் அழிந்து வரும் மானினம் போல் தாயும் மகளும் பாதி உயிரும் மீதி உடலுமாக ஆளுக்கொரு மூளையில் முடங்கிக் கிடந்தனர்….

அறைக்குள் ஆட்கள் வரும் சப்தம் கேட்டு எழுந்தனர்…. இவர்களைக் கண்டதும் கஸ்தூரி மிரள… ஜான்சி உயிரை கையில் பிடித்துக் கொண்டு எழுந்து மான்சியின் அருகே வந்து விரக்தியான ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “உனக்கு இப்போ சந்தோஷமாடி? அன்னைக்கு என் தாலியைப் பறிச்ச… அப்புறம் அவர் உயிரையும் பறிச்சிட்ட… இனி நான் எதுக்கு? என்னையும் கொன்னுடு மான்சி” என்றவள் தங்கையின் கைகளை எடுத்து தன் கழுத்தில் வைத்து “கொன்னுடுடி… என்னையும் கொன்னுடு” என்று கத்தவும் முடியாமல் மெல்லிய குரலில் கதறினாள்

“முட்டாள்” என்று எரிச்சலுடன் கூறியபடி அக்காவின் கைகளை உதறி அவளின் தோள் பற்றி கட்டிலில் தள்ளிவிட்டு “உன்னை கொல்லனும்னு நினைச்சிருந்தா அருவிகிட்ட உன் கழுத்துல கயிறைப் பார்த்ததுமே கொன்னிருப்பேன்…. என்னோட நோக்கம் என் அக்கா சந்தோஷமா வாழனும்றது தான்…. அதுக்காகத்தான் இவ்வளவும்” என்று திமிராகப் பேசினாள்…

“எது சந்தோஷம்? என் உயிரேப் போனப் பிறகு சந்தோஷம் எப்படி வரும்?…. தயவுசெஞ்சு என்னையும் சேது கூடவே அனுப்பிடுங்க” என்ற கூறிவிட்டு கையெடுத்துக் கும்பிட்டு திறனற்ற குரலில் கூறினாள்…

“ஜான்சி ப்ளீஸ்,, இப்படி சென்டிமெண்ட்டா பேசி என்னை கடுப்பேத்தாத….. நாட்டுல பணத்துக்காக என்னென்னவோ நடக்குது… அந்த பணம் நம்மகிட்ட நிறைய இருக்கு… அதை தக்கவச்சுக்கனும்னா பணம் பணத்தோட தான் சேரனும்…. அதை விட்டுட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தும் ஒரு அல்லக்கை என் அக்காவுக்கு புருஷனா வந்தா சும்மா விட்டுடுவேனா?” என்றவள் விழிகளை அகலத் திறந்து ஆத்திரமாய் அக்காவைப் பார்த்து “அழிச்சிடுவேன் அழிச்சு…. உனக்கு தாலி கட்டினவனை மட்டுமில்லை… எங்க பேச்சைக் கேட்டு நீ ஒழுங்கா நடந்துக்கலைன்னா மிச்சமிருக்கிற அந்த ரெண்டு நாய்களையும் கூட என் கையாலேயே சுட்டுத் தள்ளிடுவேன்” என்று கர்ஜிக்கவும்…பூஞ்சை மனம் படைத்த கஸ்தூரியும் ஜான்சியும் மிரண்டு போயினர்….

“இதோபார் ஜான்சி நான் சொல்ற மாதிரி கேட்டு நடந்தா சொர்க்கத்தையே உன் காலடியில் கொண்டு வந்து வைப்பேன்… இல்லேன்னு வை…. உன்னை எதுவும் செய்யமாட்டேன்….. அந்த பெக்கர்ஸ் ரெண்டு பேரையும் தான் போட்டுத் தள்ளுவேன்…. அவனுங்க உயிரோட இருக்கனும்னா எங்கப் பேச்சைக் கேட்டு நடந்துக்க” என்று மொழிந்து அருகிலிருந்த கண்ணாடி டீபாயை ஒரு உதைவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் மான்சி…

மான்சியின் கொடும் பிரசங்கம் கேட்டு கைத் தட்டவேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இளைய மகளின் பின்னால் ஓடிய நல்லு “கரெக்டாச் சொன்ன பாப்பா” என்று பாராட்டினார்….

மான்சியின் மிரட்டல் கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர் தாயும் மகளும்….

மான்சி வடவெட்டி வந்த அன்றே சத்யனுக்குத் தகவல் போய்விட்டது…. ஜான்சியை மிரட்டியத் தகவலும் சேர்த்து சென்றடைந்தது….

அவளின் பேச்சு அவனுக்குள் பயங்கர வெறியைக் கிளப்பியது “நான் சத்யன்டி” என்று நெஞ்சை நிமிர்த்தியவன் “காட்றேன்டி இந்த சத்யன் யாருன்னு” என்ற கர்ஜனையோடு சுவற்றில் குத்தினான்…..

அவனது முகத்திலிருந்த கடுமையைக் கண்டு நடுக்கம் கொண்ட தேன்மொழி “கோபம் கூடாது சத்யா,, இப்பதான் நீ ரொம்ப நிதானமா இருக்கனும்….. ஆத்திரம் அறிவுக்கு சத்ருனு நாம படிச்சிருக்கோமே…. அதனால கோபத்தை தள்ளி வை…. நாம செய்யப் போற வேலையைப் பத்தி பலமுறை யோசி சத்யா… கொஞ்சம் பிசகினாலும் மொத்த பேரும் மாட்டுவோம்” என்று எச்சரிக்கை செய்தவள்.. சத்யனை நெருங்கி ரகசியமாக “நாளைக்கே அந்த அடங்காப்பிடாரி சென்னை கிளம்புறாளாம்…. அவ காரை அவளேதான் ஓட்டிக்கிட்டுப் போவாளாம்….. நீங்க ரெண்டு பேரும் எந்த இடத்தில் அவளை மடக்கனும்னு திட்டம் போட்டு அங்க போய் வெயிட் பண்ணுங்க… நானும் என் வீட்டுக்காரரும் என்ன செய்யனும்னு கரெக்டா சொல்லிடு சத்யா” என்றாள்

ஒப்புதலாக தலையசைத்த சத்யன்… “அவளை என் இடத்துக்குக் கொண்டு போகிற வரைக்கும் உன் உதவியும் வேணும் தேனு….. நீயும் சங்கரும் சும்மா வெளியே கிளம்புற மாதிரி நான் சொல்ற டைமுக்கு பைக்ல வந்துடுங்க… அதேபோல அக்காகிட்டயும் சொல்லி வச்சிடு…. அவ கிளம்பும் போது நமக்கு கரெக்டா தகவல் கொடுக்கனும்… அப்பதான் நாம முன்னேர்ப்பாட்டோட இருக்க முடியும்” என்றவன் சில நூறு ரூபாய்களை தேன்மொழியிடம் கொடுத்து சிலப் பொருட்களை வாங்கிவரச் சொன்னான்….

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வேலு “எல்லாம் சரி மாப்ள…. கார்ல போற அவளை எப்படித் தடுத்து நிறுத்துறது? யாராவது உதவினு கை காமிச்சாக் கூட காரை ஏத்திட்டுப் போய்க்கிட்டே இருப்பாளேடா? நமக்கு மட்டும் எப்படி நிறுத்துவா?” என்று சந்தேகமாக கேட்க….

ஒரு ஏளனச் சிரிப்புடன் “நிச்சயம் செய்வாள் அந்த பேய்… அதுக்குத்தான் அவளை நிறுத்த நானும் ஒன்னை யோசிச்சு வச்சிருக்கேன்” என்றவன் வேலுவிடம் ஒரு சீட்டைக் கொடுத்து…. “நாம கேட்டால் நிச்சயம் கிடைக்காது…. ஆனா என்ன செய்வியோ எப்படி வாங்குவியோ தெரியாது…. நாளை மதியம் என் கைக்கு வந்தாகனும்” என்றான்….

“சரி மாப்ள… நீ கவலையை விடு… வாங்கிட்டு வந்துடுறேன்” என்றான்…

இவர்களை கவனித்த குணா தனது நெஞ்சில் தட்டி ‘நான் என்னதான் செய்றது?’ என்பதுபோல் சைகையில் கேட்க…..

அவனை தோளோடு அணைத்த சத்யன் “உனக்குதான் பெரிய வேலையே….. நான் திரும்ப வர்ற வரைக்கும் அம்மாவைப் பார்த்துக்கனும்…. அம்மாவை யாரும் நெருங்கக் கூடாது…. நான்தான் நல்லுவோட மகளைக் கடத்தினேன்னு தெரியும் போது நல்லு அவன் ஆட்களோடவும் போலீஸோடவும் வந்து பிரச்சனை பண்ணவோ அம்மாவையும் உன்னையும் தாக்கவோ செய்வாங்க… அப்போ கவனமா பிரச்சனையை கையாளனும்” என்றான்…

தலைவனாக நின்று திட்டமிடும் மகனை பயம் கலந்த பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் அருகில் வந்தான்…. கையைப் பற்றிக்கொண்டு கீழே அமர்ந்து “அம்மா,, இப்போ குணாவுக்கு சொன்னதுதான் உனக்கும்…. சேதுவை இழந்து நான் உயிரோட இருக்கிறதே உங்க ரெண்டு பேருக்காகவும் தான்…. நீதான் அவனைப் பார்த்துக்கனும்… அவன் உன்னைப் பார்த்துக்கனும்…..” என்று துயரம் நிறைந்த குரலில் கூறினான்…

மகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்ட வள்ளி “எங்களை விடு ராசு… நீ கவனமா இருய்யா… அந்த சிறுக்கி வேற ரொம்ப பொல்லாதவன்னு சொல்றாங்க…. பார்த்து சூதானமா இரு ராசு” என்று கவலையுடன் கூறவும்….. You may also like...